விளைச்சலுக்கான உரிய விலையை பெற்றுக்கொள்ள முடியாமையினால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நெல் கொள்வனவு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்
ரஞ்சித் மத்தும பண்டார இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்திலும் நாட்டின் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட தொகைக்கு நெல்லினை கொள்வனவு செய்யாமையினால் சிறு போகம் பெரும்போகம் ஆகிய இரண்டிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் தற்போதைய நிலையில் விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கான உரிய விலையினை பெறமுடியாதுள்ளனர். உரிய விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படாமையினால் விவசாயிகள் தொடர்ந்தும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே விவசாயிகளுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க முன்வருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன். ஏனென்றால் விளைச்சலுக்கான உரிய விலையை பெற்றுக்கொள்ள முடியாமையினால் அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.