”நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை” என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத் தேர்தலில் திறமையானவர்களைக் காட்டிலும் பிரபலமானவர்கள்தான் அதிகமாக நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். ஆனால் செனட் சபை முறையின் ஊடாக பிரபலமில்லாத திறமையானவர்களை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கலாம்.
இதுவரையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இருப்பதாக சமூகத்தில் சில பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தத் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க எதிர்பார்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” இவ்வாறு விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.