கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDF) ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஓகொல்லாவின் அழைப்பை அடுத்து, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் படி இலங்கைக்கும் ஆபிரிக்க பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என பாதுகாப்பு ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கென்யாவை வந்தடைந்த ஜெனரல் சவேந்திர சில்வாவை அந்நாட்டின் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் ஒகொல்லா மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் அன்புடன் வரவேற்றதுடன், கென்ய விமானப்படை வீரர்களைக் கொண்ட விசேட கௌரவக் காவலர் பூரண இராணுவ மரியாதையை செலுத்தினார்.
இந்த அங்கீகாரமானது இலங்கைக்கும் கென்யாவிற்கும் இடையிலான பரஸ்பர நட்புறவையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாகவும், உத்தியோகபூர்வ விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும் சுட்டப்பட்டுள்ளது
இவ்விழாவில், கென்யாவின் பாதுகாப்புத் தளபதி, அந்நாட்டின் பிரதிப் பாதுகாப்புத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் கஹரிரி மற்றும் இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை இலங்கை பாதுகாப்புப் படைத் தளபதிக்கு அறிமுகப்படுத்தினார்.
மேலும் கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.