தங்களது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமென இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ‘இஸ்ரேல் கட்ஸ்‘ (Israel Katz) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் காஸா மீது கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திவரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கு இடையேயும் போர் மூழும் சூழல் ஏற்போது ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், விரைவில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் தம் மீது தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும், ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படும் எனவும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.