சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பகுதிகளில் இயங்கிய 3 போலி வைத்திய நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இயக்குநரான போலி வைத்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிக நுட்பமாக வியாபார உத்தியுடன் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்களே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாகவே இவை கண்டறியப்பட்டுள்ளன. சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் இயங்கி வந்துள்ள இந்த போலி மருத்து நிலையத்தின் கிளைகள், தொடர்பாக கிடைத்த தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது தன்னை வைத்தியராக அடையாளம் காட்டிக்கொண்டு எவ்வித அரச அங்கீகாரமும் இன்றி, மருத்துவ நிலையம், அழகுக்கலை நிலையம் மற்றும் பயற்சி நிலையத்தை நடத்தி வந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான கல்வித்தகமையோ, தொழில்தகைமையோ இல்லாத குறித்த நபர் மருத்துவ பரிந்துரைகள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத மருந்துகளை பொது மக்களுக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்தோடு, அவர் தன்னை ஒரு மருத்துவராக அடையாளப்படுத்த பயன்படுத்திய போலி சான்றுப் பொருட்களும் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் ஆபத்தான மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இயங்கி வந்த இந்த போலி மருத்து நிலையம் மற்றும் அதன் இயக்குநரான போலி வைத்தியருக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.