நாட்டை தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்து முன்னேறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருக்கும் இடையே நேற்று அமெரிக்காவின் – வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற விசேட கலந்துரைடலின் போதே அவர் இவ்வாறு பாராட்டுத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர் ஷெஹான் சேமசிங்க , சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர், கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனைச் சந்தித்துள்ளார் எனவும், அவர்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணைக்கான மீளாய்வுகளை நிறைவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரையும், சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர ஷெஹான் சேமசிங்க, இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளதாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.