தெலுங்கு சினிமாவில் மெகாஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ‛‛நான் அரசியல் பேசி அதிக ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது எனது தம்பியும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்காக அரசியல் பேசுகிறேன்.
அதேபோல் எனது நண்பர்களான ரமேஷ் (அன்னகாபள்ளி லோக்சபா தொகுதி வேட்பாளர்) மற்றும் பஞ்சகர்லா ரமேஷ் பாபு (பெண்டூர்தி சட்டசபை தொகுதி ஜனசேனா வேட்பாளர்) ஆகியோருக்காக இந்த வீடியோவை வெளியிடுகின்றேன்.
பஞ்சகர்லா ரமேஷ் மற்றும் பஞ்சரகர்லா ரமேஷ் பாபு ஆகியோர் திறமையான தலைவர்கள். இருவரும் மக்களின் வளர்ச்சிக்காக குரல் கொடுக்க கூடியவர்கள். இதில் ரமேஷ் மத்திய அரசுடன் நெருக்கமாக இருப்பவர். அதேபோல் பஞ்சரகர்லா ரமேஷ் நன்கு உழைக்க கூடியவர். இவர்களுக்கு கட்டாயம் ஓட்டளிக்க வேண்டுகிறேன்.
மேலும் ஆந்திர மாநிலம் இன்னும் நன்கு வளர்ச்சியடைய வேண்டும் என்பதை விரும்புகிறேன். இதனால் பொதுமக்கள் நல்ல தலைவர்களை வாக்களித்துத் தேர்வு செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன்பிறகு சிரஞ்சீவி ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டதோடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக 2012ல் நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு 2014ல் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. அதன்பிறகும் 2018 வரை ராஜ்யசபா எம்பியாக தொடர்ந்த சிரஞ்சீவி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.