ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தடுக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விரைவில் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலும் தடுக்க முடியாது.
அரசியலமைப்பின் சட்டத்தை அவர் மீறி செயற்பட முடியாது.
நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படக்கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு அந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டது. அப்போது சஜித் பிரேமதாச 56 இலட்சம் வாக்குகளை பெற்றிருந்தார்.
ஆனால் அவர் வெற்றிபெறுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. ஏனெனில் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இனவாத மதவாத பிரிவினைகளை ஏற்படுத்தினார்.
ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரத்தை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தினார்.
ஆனால் இந்த நாட்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். 2024 ஆம் ஆண்டு இந்த நாட்டு மக்கள் நாட்டிற்கு பொருத்தமான தலைவரை தெரிவு செய்வார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.