யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இன்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காணி விடுவிப்பு, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார்.
மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.