சுற்றுலா விசாவில் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் “ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்” சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இருந்து சுற்றுலா வீசாவில் ரஷ்யா செல்வதற்கு உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்தனவின் ஆலோசனையின் பேரில், “ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின்” பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.