“வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முதலழமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒடிசாவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மோடி “வீட்டு சாவி தொலைந்தால், ஜெகன்நாதரை வணங்கிவிட்டுத் தேடினால் அடுத்த சில மணிநேரத்தில் சாவி கிடைத்துவிடும். ஆனால், இங்கு ஜெகன்நாத் கோயிலின் கருவூலமான ரத்ன பண்டரின் சாவி காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.
அந்த சாவி தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டதால், அதுதொடர்பான விசாரணை அறிக்கை ஆறு வருடங்களாக வெளியிடப்படாமலிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
குறித்த கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ”தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள்மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல.
தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம்.
இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.