சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நாளை காலை 10.30 மணி வரை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அது பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை இரவு 11.30 மணியளவில் பாரிய புயலாக மாறக்கூடும் எனவும் இதனால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் கடும் காற்று மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடற்பரப்புகளும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு மூன்று ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
அவசர நிலை தொடர்பில் தகவல் கிடைக்கும் பட்சத்தில் இந்த ஹெலிகொப்டர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.