பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முதல் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், நேற்று அதிகாலை 3 மணியளவில் குறித்த நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும் மேல் உயர்ந்துள்ளதாக எங்கா மாகாணத்தில் உள்ள லகாயிப் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகேம் தெரிவித்துள்ளார்.
எனினும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ள அவர், மேற்படி அனர்த்தத்தில் 1,182 வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனர்த்தம் காரணமாக மீட்பு; பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் பாதிப்பு நிலவரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும்; உறுதிப்படுத்தவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.