”பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த முறை சம்பள நிர்ணயசபை ஊடாக ஆயிரம் ஷரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டபோதும் அதனை வழங்க முடியாது எனக்கூறி தோட்ட நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. எனினும், இறுதியில் நாம் வெற்றிபெற்றோம்.
இந்நிலையில், பல சுற்று பேச்சுகளின் பின்னரே இம்முறை 1,700 ஷரூபா நிர்ணயிக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்களில் கம்பனிகள் பங்கேற்கவில்லை. அது அவர்களின் தவறு.
எனவே, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள தொகையை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, கம்பனிகள் வெளியேறலாம். இது பற்றி அரசாங்கமும் அறிவித்துவிட்டது.
1, 700 என்பது தேர்தல் வாக்குறுதி அல்ல, எதிரணியில் உள்ள சிலர்தான் சம்பள விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர். கம்பனிகளை நீதிமன்றம் செல்வதற்கு தூண்டியதுகூட இந்த எதிரணி தரப்புதான்.
நாட்டில் உள்ள சட்டத்தின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்துகளை வெளியிடலாம். ஆனால் அரசமைப்பின் பிரகாரமே செயற்பாடுகள் இடம்பெறும். அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்” இவ்வாறு ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.