பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள கடற்பரப்பு உள்ளிட்ட கடற்பிராந்தியத்தில் மீன்பிடி பெருமளவில் குறைவடைந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடல் கொந்தளிப்பு நிலவுகின்றமை மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு கல்முனை சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் ஏனைய நிந்தவூர் மாளிகைக்காடு மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 1600 ரூபாவாகவும், பாரை மீன் ஒரு கிலோ 2400 ரூபாவாகவும், இறால் ஒரு கிலோ 1800 ரூபாவாகவும், கணவாய் ஒரு கிலோ 1700 ஆகவும், சூடை மீன் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும், சுறா மீன் ஒரு கிலோ 2500 ரூபாவாகவும், வளையா மீன் 1500 ரூபா ஆகவும், நண்டு ஒரு கிலோ 1600 ரூபா ஆகவும் தற்போது மீனவர்களால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இதேவேளை, கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.