ரீ மெல் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும், மத்திய மலைநாட்டின் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.