யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கருவை வெளியிட்டுள்ளமைக்குச் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதிப் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் தமிழ் தேசிய பரப்பிலே இருக்கும் அனைவராலும் கொள்கை ரீதியாக முதலாவதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே வேட்பாளர் யார், எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் மூவின மக்களும் கிட்டத்தட்ட சமனாக வாழும் ஒரு மாகாணம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட சில காலம் வடக்கு கிழக்கு என்ற பிரிவினைவாதம் சில அரசியல் வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் தங்களது சுயலாப அரசியலுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டு பிரதேசவாதம் விதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக வடமாகாணத்தில் இருந்து பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் கிழக்கு மக்கள் அந்த பிரதேச வாதத்தில் சிக்குண்டு வாக்களிக்காமல் விடலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கூறியிருக்கலாம்.
ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் பிரதேச வாதத்துக்குள் சிக்குபட்டவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.