இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை அதாவது பாராளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.
அதன்படி இந்திய பாராளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என வாக்குப்பதிவுக்குப் பின்னரான கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான இந்த தேர்தல் நேற்று வரை 7 கட்டங்களாகத் நடந்து முடிந்துள்ளதுடன், தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் எந்தக் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி India News வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக கூட்டணி 359 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 154 தொகுதிகளிலும் ஏனையவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
அதேபோன்று, Matrize வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 353 முதல் 368 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 118 முதல் 133 தொகுதிகளிலும் ஏனையவை 43 முதல் 48 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாஜக கூட்டணி 365 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 140 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என Timesofindia வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவின் தமிழகத்தில் திமுக இணைந்துள்ள இந்தியா கூட்டணியே வெற்றிபெறும் என பல கருத்து கணிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.