ரபாவில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது தனது படைகளை அங்கிருந்து வெளியேற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளை சென்று பார்வையிட்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், காசாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 70 பேரின் உடல்கள் அங்கு காணப்பட்டதாகவும், பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹமாஸ் படைகள் முற்றாக அழிக்கப்படும் வரை காசாவில் தமது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், உடனடிப் போர் நிறுத்தத்துக்கு கனடா அழைப்பு விடுப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் உடனடி போர் நிறுத்தம், தடையில்லா மனிதாபிமான உதவிகளை அவசரமாக அதிகரிப்பது மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒரு வாய்ப்பாகும் என்றும், இதனைக் கருத்திற்கொண்டு அமைதிக்கான பாதைக்கு திரும்ப வேண்டும் என கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.