பொது வேட்பாளர் விடயத்தில் யாழ் மக்களைத் தூண்டிவிட்டு எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால், அது நடக்காது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் தங்களுக்கு எது சரி என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள் இல்லையென்றால் விலக்கி வைப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்றும் அதற்கான காரணங்களையும் தான் ஏற்கனவேயே கூறியிருப்பதாகவும், பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முதலில் முடங்கிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த தேர்தலில் தேசியத்திற்கு விழுந்த வாக்கை எடுத்துப் பார்த்தால் அது புரியும் என்பதுடன், தற்போது தமிழ்த்தரப்பு பிளவுபட்டு இருக்கும் போது என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை ஐனாதிபதியாக்குவதற்குத் தான் இவர்கள் பொது வேட்பாளரை முன்வைத்தார்கள் என்ற கருத்தில் தான் உடன்படவில்லை என்றும் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொது வேட்பாளர் தொடர்பில், தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் கட்சி ரீதியாக இதுவரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்றும், கட்சி உறுப்பினர்கள் தனித் தனியாக இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழரசுக் கட்சி பொறுப்பாகாது எனவும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.