இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16 ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதி முறைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 16 ஆம் திகதி வெளியானது.
அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தன.
தொடர்ந்து கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் ஜூன் ஒன்றாம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடந்த முடிந்த தேர்தல், கடந்த 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில், அமுல்படுத்தப்பட்டிருந்த தேர்தல் விதிமுறைகளும் இன்றுடன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தபோது, 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை மற்றும் அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அத்துடன் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.