இலட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களை, தமிழக மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்து விட்டதாக மதுரை ஆதினம் கவலை வெளியிட்டுள்ளது.
மதுரையிலுள்ள, மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை சந்தித்தபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் தனது வாழ்த்தை தெரிவித்த மதுரை ஆதினம், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளதாகவும், வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியடைந்தவர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு 2 கோரிக்கைகளையும் மதுரை ஆதினம் முன்வைத்துள்ளார்.
ஒன்று, இந்திராகாந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும், இரண்டாவது, ஈழத்திலுள்ள தமிழர்களை பாதுகாக்க தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும் என தனது இரு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் குறித்த இரண்டு கோரிக்கைகளை அவரிடம் முன்வைப்பதாகவும், தமிழனுக்காக தனி நாட்டை கேட்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காகவும் தான் பிரதமர் மோடியை ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழக மக்கள் மீது ஒரு வருத்தம் இருப்பதாக தெரிவித்த மதுரை ஆதினம், இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என கவலை வெளியிட்டுள்ளார்.
அதனால்தான் காங்கிரஸ் கட்சியால் மத்தியில் ஆள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, அண்ணாமலைக்கு நல்ல வாக்குகளை கொடுத்துவிட்டார்கள் என தெரிவித்த மதுரை ஆதினம், இலங்கை தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தது மட்டும் பெரிய வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.