நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப்பெறுகின்ற இறுதித் தீர்மானமானது, தனிப்பட்ட நபரின் வெற்றி அல்ல எனவும் அது ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியாகவே அமையவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகள் தனிப்பட்டவை அல்ல. மாறாக நாட்டின் வெற்றியாகும். நாட்டின் பொருளாதார ரீதியான வங்குரோத்து நிலையை பற்றி பலரும் பேசுகிறார்கள். அதனை நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.
இந்த நாடு பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல் ரீதியாகவும் வங்குரோத்தடைந்துள்ளது என்பதே உண்மையாகும். இவை இரண்டும் பிரித்துப் பார்க்க முடியாத பிரச்சினைகளாகும்.
நாட்டில் சரியான பொருளாதார முறைமை இன்மையே அதற்கு காரணமாகும். நாட்டில் இதுவரையிலும் இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரமே காணப்பட்டது.
யுத்தத்திற்கு பின்னர் துரிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடிப்பதற்கான வாய்ப்பு நாட்டுக்கு கிடைத்திருந்தது.
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களின் பின்பும் நாம் அந்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஒரு ஆசனத்தை வென்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக பதவியேற்றதில்லை.
ஆனால் இலங்கையில் அது நடந்தது. நாட்டின் அரசியல் வங்குரோத்து நிலையே அதற்கு காரணமாகும். இந்தத் தேர்தலில் தீர்மானிக்கப்படுவது எனது வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல.
நாடு தோற்கடிக்கப்படுமா? இல்லையா? என்பதையே இந்த தேர்தல் தீர்மானிக்கும்.
இன்று அரசியல் வாதிகள் பலதரப்பட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அவர்களில் எவரும் நாட்டின் முன்னேற்றுத்துக்கான கொள்கைகளை முன்மொழியவில்லை.
எதிர்க்கட்சித் தலைவரும், அநுர குமார திசாநாயக்கவும் எந்த இடத்தில் விவாதம் செய்வது என்பது குறித்து ஒரு மாத காலமாக முரண்படுகின்றனர். இறுதியாக இன்னமும் ஒரு தீர்மானத்திற்கு வரவும் இல்லை.
இவர்களில் ஒருவரிடத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்கான கொள்கைகள் இல்லை.
உங்கள் எதிர்காலத்தை பொறுப்பேற்க அவர்கள் தயாராக இல்லாத பட்சத்தில்
உங்களின் எதிர்கால முன்னேற்றத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.