ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கோலம் சர்வார்க்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது
அதன்படி சார்க் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பக்கச்சார்பற்ற தலையீடுகளை மேற்கொள்ளுமாறு சார்க் பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.
இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், சார்க் நாடுகளிடமிருந்து பெறக்கூடிய ஆதரவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் நவீன கலைக்கான சார்க் கலாச்சார மையத்தை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.