நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட நிதி உதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்டமாக 336 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை முறையாக மேற்கொண்டு அதன் இலக்கை அடைந்திருக்கிறது.
அதேபோன்று நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்க அமைய நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரித்துள்ளது.
பணவீக்கம் குறைவடைந்துள்ளது.
அதேபோன்று வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதிகரித்து வருவதால், ரூபாவின் பெருமதி அதிகரித்து வருகிறது.
அதன் பிரகாரம் பொருட்களின் விலை இருந்ததைவிட குறைவடைந்துள்ளது. மேலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேரதல் இடம்பெற இருக்கிறது.
இந்த தேர்தலில் மக்கள் எடுக்கும் தீர்மானத்திலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது” என ஆசு மாரசிங்க மேலும் தெரிவித்தார்.