நாட்டில் தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வடக்குக்கு சென்று 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், காலவரையறையின்றி மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் தமிழர்களின் அரசியல் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் அறியவில்லையா? எனவும் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்தவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கட்சி என்ற ரீதியில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.