நாட்டில் புதிய அரசாங்கம் அமையும் போது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிற்கு மிகவும் நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்ரமசிங்கவும் அவரது கட்சியும் ஒரே சித்தாந்தத்தை கொண்டே செயற்படுகின்றார்கள்.
நாடு இப்போது இருக்கும் இடத்தில் இருந்து சிறிய மாற்றத்தை எதிர்கொண்டாலும் நாட்டின் போக்கு மாறிவிடும்.
நாட்டின் போக்கில் வீழ்ச்சி ஏற்பட்டால், சர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும்.
இலங்கையால் சர்வதேச கடன் மீள்செலுத்துகையில் இருந்து ஒரு படி கூட முன்னேறமுடியாத நிலை ஏற்படும்.
பல்வேறு தேரர்கள் கூறும் பொய்யான கதைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
ஜனாதிபதியும் மத்திய வங்கியும் இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டால், அங்கு எந்த கட்சி ஆட்சியை அமைத்தும் பயனில்லை.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச பிரதமராகவும் செயற்பட முடிந்தால் அது நாட்டிற்கு மிகவும் நல்லது” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.