ஒடிசாவின் பாலசோர் நகரிலுள்ள புஜாக்கியா பிர் பகுதியில் இரு சமூகத்தினர் இடையே இடம் பெற்ற மோதலைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்டதொரு சமூகத்தினர், அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் இரத்தத்தை வீதியில் வழிந்தோடவிட்டதாக குற்றச்சாட்டி நேற்று அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எதிர் தரப்பிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து இருதரப்புக்குமிடையே மோதல் வெடித்ததாகவும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை (ஊரடங்கு) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கலவரத்தைத் தொடர்ந்து பாலசோர் பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், கலவரம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாலசோர் முழுவதும் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















