உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதமான அணு ஆயுதங்களை ரஷ்யா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்கா, ரஷ்யா, பித்தானியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய ஒன்பது உலக நாடுகள் அணு ஆயுத சக்தியை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதத்தை ரஷ்யாவும் அமெரிக்காவும் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது சீனாவின் வசமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சற்று குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் வசம் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இதற்காக உலக நாடுகள் சுமார் 91.3 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் தற்போது 9,585 அணு ஆயுதங்கள் செயற்பாட்டிலுள்ளதாகவும், இதில் சீனாவிடம் மட்டும் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.