”கனிபல் லிசம்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்றில் நேற்றைய தினம் பயன்படுத்தியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கோரவேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”கனிபல் லிசம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை நேற்று ஜனாதிபதி பயன்படுத்தியிருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். நீதிமன்றத்திற்கு இந்த சொல்லாடல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனாதிபதி தவறுதலாக இந்த வார்தையை பயன்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோரவேண்டும். அல்லது வார்த்தையை வாபஸ் பெறவேண்டும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளபோதும், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானங்களை பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.