பெலியத்தையிலிருந்து மருதானைக்கு புகையிரதத்தில் விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜூன் 29ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானைக்கு விவசாயப் பொருட்களை புகையிரதத்தில் ஏற்றிச் செல்லும் முன்னோடி திட்டமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
உலக வங்கி உதவியுடன் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லும் முறையைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் விவசாய போக்குவரத்து வசதிகளுக்காக புகையிரத முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு செயலி மூலமாகவும் தொலைபேசி அவசர அழைப்பை பயன்படுத்தியும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்களது விவசாயப் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அறுவடைக்குப் பின் ஏற்படும் சேதங்களை குறைக்கவும், போக்குவரத்து கட்டணத்தை குறைக்கவும் முடியும் என புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் தர்மசிறி, காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சிந்தக ஹெட்டியாராச்சி, இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத பொது முகாமையாளர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.