ரஷ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மதகுரு உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் (Dagestan) பகுதியில் ஆயுதமேந்திய நபர்களினாலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
டெர்பென்ட் மற்றும் மகச்சலா நகரங்களில் அமைந்துள்ள பெந்தகோஸ்மத பிரிவினரின் மதவழிபாட்டு நிகழ்வின்போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில், ஏழு பொலிஸார், மதகுரு பாதுகாப்பு உத்தியோகத்தர், பொது மக்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தாக்குதலினால் அங்குள்ள வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஆறு பேர் பொலிஸாரின் பதில் தாக்குதலினால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ரஷ்ய செய்திகள் தெரிவித்துள்ளன.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை எனினும் கடந்த காலங்களில் டாகெஸ்தான், பல தடவைகள் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் இரண்டு கிறிஸ்தவ தேவலாயங்களும் யூதவழிபாட்டுதலமும் இலக்குவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புநிறத்தில் உடையணிந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தொடரணி மீது தாக்குதலை மேற்கொள்வதை காண்பிக்கும் காணொளிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
டெர்பென்ட் என்ற பிரதேசத்தில், பலவருடங்களாக யூதர் வாழ்ந்து வரும் பகுதியில் உள்ள யூதவழிபாட்டுதலம் மீதும் கிறிஸ்தவ தேவாலயம் மீதும் தீவிரவாதிகளால் தொடச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.