நீதியமைச்சர் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் விமர்சித்து முன்வைத்த பொறுப்பற்ற கருத்துக்கள் நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுப்பதாக, இலங்கை மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களை உள்ளடக்கிய இலங்கை நீதிச்சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, அரசியல் ரீதியிலான தமது இருப்பை சவாலுக்கு உட்படுத்தும் வழக்குகளின் போது நீதிமன்றத்தின் சட்டத்திற்கமைவான தீர்ப்புகள் காரணமாக அதிருப்தி அடைந்ததால் அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகளால் திருப்தி அடையாதவர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு நடைமுறைக்கு செல்லாமல் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் மறைந்து நீதிமன்றத்தை அவதூறு செய்வது ஜனநாயக சமூகத்தின் அடிப்படையான நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு பகிரங்கமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பக்கச்சார்பற்ற நீதிபதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கான திட்டமொன்று படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படடுள்ளதை தாம் அவதானிப்பதாக, இலங்கை நீதிச்சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் நீதியமைச்சரின் இந்த கருத்துக்களின் இறுதி விளைவாக மக்களின் இறையாண்மை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் 3 முக்கிய நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அற்றுப்போவதை தவிர்க்க முடியாது என அந்த சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.