யாழ் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.
இந்தியப் மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்தபோது இந்திய மீனவர்களுக்கும் கடற்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதன்போது உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும், மீனவர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யச் சென்ற, இலங்கை கடற்படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் படகில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தொிவித்துள்ளாா்.
குறித்த கடற்படை சிப்பாய் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கடற்படை பேச்சாளர் அதனை மறுத்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதாகவும், அதன் போது படகில் தடுமாறி அவர் விழுந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.