பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இது தொடர்பான உடன்படிக்கைகள் நாளை கைச்சாத்திடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளின் குறுகியகால கடன் மற்றும் நீண்டகாலக் கடன் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்திவரும் பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பேச்சு நடத்தியிருந்தது.
குறிப்பாக ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களை மறுசீரமைப்பது மற்றும் கடனை மீள செலுத்தும் காலத்தை நீடித்தல் உள்ளிட்ட விடயங்களில் நீண்ட விரிவான உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
அத்தோடு இலங்கையின் நிதி நிலைமைகள் மற்றும் கடன் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதநிதிகளுடனும் நிதி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தியிருந்ததுடன், சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
எனினும், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் கட்சிகள் குறிப்பாக பிரதான எதிர்க்கட்சிகள் அதனை அரசியலாக்குவதாக நிதி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் சிலர் விசனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே தற்போது பரிஸ் கிளப் மற்றும் ஏனைய கடன் பங்குதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாராளுமன்றத்திற்கும் வெளிப்படைத்தன்மையான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பரிஸ் கிளப் குழுவுடனான சந்திப்புக்கு இலங்கையில் இருந்து அதிகாரிகள் குழு அங்கு சென்றுள்ளதாகவும் இதன்போது உடன்படிக்கைகள் கைச்சாதிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.