நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், பொது மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில், சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் முக்கிய விடயங்களை பகிர்ந்துள்ளனர்.
அதன்படி, பொதுமக்கள் நோயினைப் பற்றிய நமது அறிவைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் இலங்கையில் இது போன்ற நோய் பரவல் குறித்து அறிக்கை கிடைக்கப் பெற்றால் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, பறவைகள் அல்லது பறவைகளின் மலங்களை தொட வேண்டாம் எனவும் விற்பனை பறவைகளை சந்தையில் அல்லது கோழி பண்ணைகளில் பார்வையிடுவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாகக் கோழி இறைச்சி அல்லது முட்டை பாவனையின் பின்னர் கைகளை சவர்க்காரமிட்டு அடிக்கடிக் கழுவ வேண்டும் எனவும் சவர்க்காரம் அல்லது நீர் இல்லாதவிடத்து கைகளுக்கான திரவியங்கள் பயன்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், எந்தவொரு கிருமிகளையும் அழிக்கக் கூடிய வகையில் அனைத்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை முறையாக சமைத்ததாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பச்சையாக அல்லது அரைப்பதத்தில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி தயாரிப்புக்களை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.
நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளை கண்டால், உடனடியாக சுகாதார அதிகாரிகளிடம் அறிவிக்குமாறும் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வலியுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதுடன் மற்றும் அறிந்து இருப்பதால், பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலில் இருந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.