”கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
களுத்தறை, புலத்சிங்கல மதுராவல, ரெமுன மகா வித்தியாலத்தில் நேற்று நடைபெற்ற பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” IMF திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம். எனினும் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
2028 வரை கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. 2028 முதல் கடன் தவணைகளைச் செலுத்த வேண்டும். இது ஒரு நல்ல விடயம் போல் தெரிந்தாலும், IMF இன் 2023 மார்ச் அறிக்கை கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின்படி, நாம் 2033 முதலே கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
IMF அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்த இணக்கப்பாட்டு கலந்துரையாடலினால் 2033 இலக்கை எட்ட முடியாது போயுள்ளது. மேலும், சகல நாடுகளையும் விட எமது நாடு கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை வேகமாக பூர்த்தி செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது முற்றிலும் தவறான கருத்தாகும். எமது நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை.
செயல்முறையை முழுமைப்படுத்தாமல் இவ்வாறு மக்களிடம் பொய் சொல்வது தவறாகும். எம்மை விட வேகமாக தங்கள் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை முழுமையாக மறுகட்டமைத்த பல நாடுகள் உள்ளன.
எமது நாட்டில் வட்டி குறைப்புக்கான இணக்கப்பாடு எட்டப்படவில்லை. வட்டியையும் கந்துவட்டியையும் செலுத்த வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.
ஒரு நாடாக நாம் ஒரு முழுமையான இணக்கப்பாட்டை எட்டவில்லை. சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் அடங்களாக சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை.
இந்த கலந்துரையாடல்கள் ஜூலை 3 ஆம் திகதி வரை தொடர்கிறது. இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், எமது நாட்டுக்கு எதிராக வழக்குத் தொடரவும் குறித்த தரப்பினர் தயார் நிலையில் உள்ளனர்”இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.