சர்வதேச மட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்றாகும்.
இந்த தேர்தலில், இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட 6 பேர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் களமிறங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, தொழிற்கட்சியின் சார்பில் உமா குமாரன் (Uma Kumaran) மற்றும் டெவினா போல் (devina paul), போட்டியிடுகின்றனர்.
கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் கெவின் ஹரன் (Kavin Haran) போட்டியிடுகின்றார். த க்ரீன் கட்சியின் சார்பில் நாராணி ருத்ரா ராஜன் (Rudra Rajan) போட்டியிடுகின்றார். லிபரல் டெமோகிரட்ஸ் கட்சியின் சார்பில் கமலா குகன் (Kamala Kugan) மற்றும் ரிஃபோர்ம் யு.கே கட்சியின் சார்பில் மயூரன் செந்தில்நாதன் (Mayuran Senthilnathan) ஆகியோரே பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற இலங்கை பின்னணியைக்கொண்ட தமிழர்களாவர்.
இந்நிலையில், பிரித்தானிய தேர்தல் தொடர்பாக தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் படி, தொடர்ந்தும் தொழிற்கட்சிக்கே அதிக ஆதரவு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய கருத்துக்கணிப்புகளின் படி தொழில்கட்சிக்கு 40 வீத ஆதரவு காணப்படுவதாகவும், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சவேட்டிவ் கட்சிக்கு 20 வீத ஆதரவு காணப்படுவதாகவும், சீர்திருத்த கட்சிக்கு 15 வீத ஆதரவும், லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 11வீத ஆதரவும் மற்றும் பசுமை கட்சிக்கு 5.8 வீத ஆதரவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழில்கட்சிக்கு 326 ஆசனங்கள் கிடைக்கலாம் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 127 ஆசனங்களும் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 50 ஆசனங்களும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும், இன்றைய தேர்தலின் பின் வெளிவரும் முடிவுகளே, பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.