பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று கொழும்பு, பம்பலப்பிட்டியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பம்பலபிட்டி – வஜிர வீதியில் உள்ள தோட்டத் துரைமார் சங்க கட்டடத்திற்கு முன்பாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தின்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கோஷமெழுப்பியும் பதாகை ஏந்தியும் கண்டனம் வெளியிடப்பட்டது.
போராட்டத்தின்போது தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கட்டடத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது, அங்கு பதற்றமானதொரு சூழ்நிலைமையும் ஏற்பட்டது. இதனையடுத்து, பொலிஸாரின் தலையீட்டையடுத்து அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.