”நாட்டில் புதிய பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கரத்னாவின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி கரந்தெனிய ஸ்ரீஅபயதிஸ்ஸ பிரிவெனாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமரபுர மகா நிக்காய – ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் 44ஆவது உபசம்பதா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும்
ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால் இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி நாம் மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளோம். எனவே, நாட்டில் புதிய பொருளாதாரம், அரசியல் முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.
நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.
நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. நீண்டகாலமாக பேணப்பட்ட இறக்குமதி பொருளாதாரக் கொள்கையினால் அந்த நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் மற்றைய அனைத்து தேரவாத பௌத்த நாடுகளும் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தன. எனவே, நாட்டில் புதிய மாற்றங்களை நாம் விரைவில் உருவாக்கவேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.