விண்வெளியில் 52 நாட்களாக சிக்குண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களும், ஒகஸ்ட் மாதம் பூமிக்க திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் 5 ஆம் திகதி புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் விண்வெளிக்கு சென்றிருந்தார்.
அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், ஜூன் 7 ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13 ஆம் திகதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
எனினும், பயணத்திட்டம் திடீரென 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் அந்த திகதியிலும் அவர்கள் பயணிக்கவிருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் பிரச்சினை ஏற்பட்டது.
இவ்வாறு 52 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களும், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்குண்டுள்ளமையால், அவர்கள் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து தற்போது கருத்து வெளியிட்டுள்ள நாசா, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தோடு இயக்கப்பட்டு இருக்கும் போயிங் விண்கலத்தின் ப்ளைட் கன்ட்ரோலர் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சோதனையின் போது ஸ்டார்லைனர் கலிப்சோவிற்குள் அமர்ந்து தகவல்களை வழங்கியதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போயிங் விண்கலத்தில் ஹீலியம் கசிவு சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஒகஸ்ட் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.