தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை தீர்மானிக்கும் சக்தியாக வரக்கூடிய வாய்ப்பு ஜனாதிபதித் தேர்தலில் உண்டு என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தூதரகங்களுடான சந்திப்புகளின் போது தமிழ் அரசியல்வாதிகளுக்கு அது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த தென்னிலங்கை வேட்பாளர் வெற்றி வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டிருப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு. நேற்று யாப்பானத்துக்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்கவும் அப்படித்தான் நம்புகிறார் போலும்.
தென்னிலங்கையை யார் ஆள்வது என்பதனை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் ஒரு அரசியல் சூழல் இந்த முறை மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதல்ல. கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் அது ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த யாப்புச் சதிப் புரட்சியின் போதும் அப்படி ஒரு நிலைமை காணப்பட்டது. யாப்புச் சதிப் புரட்சியில் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தது தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள்தான்.அவ்வாறு சிறிய தேசிய இனங்கள் ஒரு பெரிய தேசிய இனத்தின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் நிலை வரக்கூடாது என்று ராஜபக்சங்கள் நன்கு திட்டமிட்டு உழைத்ததன் விளைவுதான் அதையடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலில் அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பம் பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆகும்.
எனினும் மறுபடியும் இப்பொழுது,ஜனாதிபதியைத் தமிழ் மக்கள் தீர்மானிக்கும் ஒரு கட்டம் வந்திருக்கின்றதா? அப்படியென்றால் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும்? அல்லது தமிழ் மக்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படும் தேர்தல் களத்தில் தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும்?
தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்கள் தங்களை நோக்கி மேலும் இறங்கி வரும் விதத்தில் தம்மை மேலும் பலப்படுத்த வேண்டும். அதே சமயம்,தென்னிலங்கை வேட்பாளர்கள் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வர வேண்டும்.
அதற்குப் பின்வரும் காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, அதுதான் பெரிய இனம். ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் இனம். அரசுடைய தரப்பு. எனவே அதுதான் முதலில் அரசற்ற தரப்பை நோக்கி வரவேண்டும். இரண்டாவது,அதுதான் ஒடுக்கிய இனம். கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்களை ஒடுக்கியதும் இன அழிப்பு செய்ததும் அவர்கள்தான். எனவே அதற்குரிய பரிகாரமாக அவர்கள்தான் இறங்கி வர வேண்டும்.
சாதாரணமாக ஒரு வியாபாரத்தில் பேரம் என்று வரும் பொழுது யாருடைய உதவி தேவைப்படுகிறதோ அவர்களை நோக்கி உதவி கேட்கும் தரப்புத்தான் இறங்கி வர வேண்டும். எனவே தென்னிலங்கை வேட்பாளர்கள்தான் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வந்து தாங்கள் என்ன தர முடியும் என்பதனை தெளிவாகக் கூற வேண்டும்.அண்மை வாரங்களாக தென்னிலங்கை வேட்பாளர்கள் தமிழ் அரசியல்வாதிகளை வீடு வரை வந்து சந்திக்கின்றார்கள்.இக்கட்டுரை எழுதப்படுகையில் ரணில் யாழ்ப்பாணத்தில் நிற்கிறார்.
ஆனால் அவ்வாறு தமிழர்களை நோக்கி வரும் யாருமே தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையூட்டும் வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்பதுதான் இலங்கைதீவின் துயரம்.தாங்கள் எதைத் தர முடியும் என்பதனை அவர்கள் வெளிப்படையாக முதலில் கூற வேண்டும்.
கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் உடன்படிக்கைகள் முறிக்கப்பட்ட அனுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு. அவ்வாறு உடன்படிக்கைகள் முறிக்கப்படும் பொழுதெல்லாம் முதற் பலியாவது தமிழ் மக்கள்தான். அதுமட்டுமல்ல இலங்கைத் தீவில் இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பெரும்பாலானவற்றை முதலில் குழப்பியது தென்னிலங்கைத் தரப்புகள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் மட்டும்தான் சமாதான முயற்சிகள் சில தமிழ்த் தரப்பால் குழப்பப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு.ஆனால் அதற்கு முன்னும் பின்னும் சமாதான முயற்சிகளைக் குழப்பியது முழுக்க முழுக்க அரசு தரப்புதான். கடந்த 2015ல் ஆட்சி மாற்றத்தின் பொழுது தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களித்தார்கள். ஆனால் மைத்திரி தனக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு துரோகம் செய்தார். தென்னிலங்கை தரப்புக்களால் ஏமாற்றப்பட்ட ஆகப்பிந்திய அனுபவம் அது.
இந்த அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், யாருக்கு தமிழ் மக்கள் தேவையோ அவர்கள் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வரட்டும். அவர்கள் தாங்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தரக்கூடும் என்பதனை முதலில் வெளிப்படையாக மேசையில் வைக்கட்டும். அதன்பின் மூன்றாவது தரப்புக்களின் மேற்பார்வையோடு ஒரு உடன்படிக்கைக்கு தயாரா என்பதை தெரியப்படுத்தட்டும்.
நிச்சயமாக எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் அதற்குத் தயாராக இருக்க மாட்டார். மனோ கணேசன் சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சிகள் வைத்துக் கூறியதுபோல தமிழ் மக்களோடு ஓர் உடன்பாட்டுக்கு வரும் தென்னிலங்கை வேட்பாளர் 100 தமிழ் வாக்குகளைப் பெறலாம். ஆனால் அவர் தெற்கில் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்பதுதான் இப்பொழுதும் இலங்கைத் தீவின் மிகக் குரூரமான அரசியல் யதார்த்தம்.
இலங்கைத் தீவில் இதுவரையிலுமான எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்கு முறைகள் தொடர்பில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதில்லை. குறைந்தபட்சம் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்தியதும் இல்லை. முள்ளிவாய்க்காலில்,நினைவிடத்தில் ஒரு பூவைக்கூட வைக்காத அரசியல்வாதிகள்.
சில ஆண்டுகளுக்கு முன் தெற்கில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை முன்னடத்திய அமைப்புகள் அவ்வாறு அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது தேர்தல் கேட்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களின் தோழமைத் தரப்புகள். ஆனால் பெரும்பான்மைக்குள் சிறுபான்மை. அண்மையில் காலமாகிய விக்கிரமபாகு கருணாரத்தினவைப் போல அவர்களும் பெரும்பான்மைக்குள் சிறுபான்மை. அவர்களில் சில தரப்புகள் இப்பொழுது உருவாக்கியிருக்கும் தேர்தல் கூட்டுக்கள் தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.ஆனால் அந்தத் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஆதரித்த தமிழ் அரசியல்வாதிகள் எவருமே அத்தகைய தரப்புகளோடு இதுவரையிலும் எந்த ஒரு உடன்படிக்கைக்கும் வந்ததாகத் தெரியவில்லை.மாறாக ஒப்பீட்டுளவில் வெற்றி பெறக்கூடிய பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எப்பொழுது தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவார்கள் என்று காத்திருப்பதாகவே தோன்றுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சம்பந்தரும் இவ்வாறுதான் காலத்தைக் கடத்தினார்.ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அந்தக் கட்சி இப்பொழுது இரண்டாக உடைந்து நிற்கிறது.ஒரு பகுதி தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றது. இன்னொரு பகுதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. ஆனால் தேர்தல் அறிக்கைகளுக்காக காத்திருக்கும் பகுதி தெளிவாக முன்வந்து பொது வேட்பாளரை எதிர்க்கின்றது.கட்சி என்ன முடிவை எடுத்தாலும் தான் தனது முடிவில் உறுதியாக இருக்கப் போவதாக பகிரங்கமாக அறிவிக்கின்றது. அதாவது கட்சியின் உத்தியோகபூர்வ முடிவை மீறுவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றது. ஆனால் கட்சியோ முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
அதாவது உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்க முடியாத ஒரு நிலை.மேலும் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கும் ஒரு நிலை. மற்றொரு கட்சி பரிஸ்கரிக்கின்றது. ஏழு கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை முன்வைக்கின்றன. இந்நிலையில் தென்னிலங்கை வேட்பாளர்கள் யாரோடு பேச வருவார்கள்? யார் தங்களை பலசாலிகளாகக் கட்டி எழுப்புகின்றார்களோ, யாரோடு தமிழ் மக்கள் நிற்கின்றார்களோ, யார் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலையை தோற்றுவிக்கப் போகிறார்களோ, அவர்கள்தான் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். அதன் பொருள் தமிழ் பொது வேட்பாளர் தென்னிலங்கை வேட்பாளர்களோடு இரண்டாவது விருப்பது தெரிவு வாக்குக் குறித்துப் பேரம் பேசுவார் என்பதல்ல.