வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக “Voice Of Sri Lanka” எனும் இணையதளத்தில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மோசடி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என இதுவரை இல்லாத சட்டம் திடீரென கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், வேறொரு பிரதேசத்தில் வாக்களிக்கும் போது அதனைப் பயன்படுத்துபவர்களை அடையாளம் காண முடியாமல் கடவுச்சீட்டை சரிபார்த்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வாக்குகளில் மோசடி செய்யும் பாரிய திட்டம் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்தது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவியபோது, நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக வாக்காளர்களுக்கு வேறொரு இடத்தில் இருந்து வாக்களிக்க வாய்ப்பு இருந்ததாகவும் அது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தச் சட்டத்தின்படி, உயிருக்கு அச்சுறுத்தல் அல்லது அச்சம் உள்ள எந்தவொரு வாக்காளரும் தனது வாக்களிப்பு நிலையத்தை தவிர வேறு இடத்தில் வாக்களிக்கக் கோரலாம். அவர்கள் கோரும் வாக்களிப்பு நிலையத்தை வழங்க வேண்டும் என்ற விதி எதுவும் இல்லை எனவும், பாதுகாப்பான வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தேர்தல்கள் ஆணையாளரின் பொறுப்பாகும் எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல்கள் திணைக்களம் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவது வழக்கம் எனவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்தார்.
வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததுடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான வாக்களிப்பு முறைமை இதுவரையில் தயாரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்னதாக தேர்தல்கள் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்ட திகதியில் மற்றும் இடத்தில் வாக்களிப்பதற்கான வாய்ப்பை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் முன் வாக்குப்பதிவு குறித்து விவாதம் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டம் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிறைச்சாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மூட முடியாது எனவும், அந்த அதிகாரிகளுக்கு ஒரே நாளில் வாக்களிக்க வாய்ப்பளிக்க முடியாது எனவும், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களினால் தபால் மூல வாக்குகளை செலுத்த முடியும் என்பதனால், முந்திய வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலம் செலவுகளை குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
அதேபோல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிடம் factseeker வினவிய போது அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என தெரிவித்தார்.
கடவுச்சீட்டை எடுக்க வருபவர்களிடம், தரகர்களை பயன்படுத்தி, லஞ்சம் வாங்குவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதனை தடுத்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தும் நோக்கில், ‘இணையம்’ மூலம், கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமையை அறிமுகப்படுத்தியதாகவும், இந்த முறைமையின் மூலமாக மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை வழங்கப்பட்ட வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைக் கருத்தில் கொண்டால், 77 வீதமானோர் தேவைக்காக அல்லாமல், 23 வீதமானவர்கள் மட்டுமே தேவைக்காகப் பெற்றுள்ளனர். அத்துடன் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் வெளிநாடுகளுக்குச் செல்வதாகத் தமது திணைக்களத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிலைமையைக் கட்டுப்படுத்த இலத்திரனியல் கடவுச்சீட்டு இந்த வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இ-பாஸ்போர்ட் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், தற்போதுள்ள கடவுச்சீட்டு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, எனவே அதனை இந்த நாட்டிலும் நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு 6.89 அமெரிக்க டொலர்கள் செலவாகும். எதிர்காலத்தில் அதற்காக செலவிடப்படும் பெரும் தொகையை சேமிக்க முடியும் எனவும் இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
கடவுச்சீட்டு தேவையில்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும், ஆனால் மக்களால் அது புறக்கணிக்கப்பட்டு வருவதால் அதனை கட்டுப்படுத்தவே இந்த இணைய விண்ணப்பம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆகவே,Voice Of Sri Lanka இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானவை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.