வெலிக்கடை சிறைச்சாலையில், கைதிகளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு, வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகத்தின்போது, 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
எனினும், 8 கைதிகள் கொல்லப்பட்டமைக்கான சாட்சிகள் மட்டுமே கிடைத்திருந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ ஆகியோர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி இந்த வழக்கில், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அத்தோடு, வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருந்தார். கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆரச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமே இந்த தீர்ப்பை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி லமாஹேவா உயர்நீதிமன்றித்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வானது, கொழும்பு மேல்நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவித்து இன்று தீர்ப்பளித்தது.