வெனிசுலாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வெனிசுலா தலைநகரில் அதிகளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சர்ச்சைக்குரிய வெற்றிக்கு எதிராக வெனிசுலா முழுவதும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மக்களுடன் இணைந்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களுடன் இணைந்து போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் வெனிசுலா தலைநகரில் இருந்து வெளியேறப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டுள்ளார்.
மக்களை திரட்டி நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள மதுரோவின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொலிஸாரும் இராணுவமும் சம்பவ இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் வெனிசுலாவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற நிலையில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் 51.02 வீத வாக்குகளை மதுரோ பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளர் 44.02 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.
எனினும் வாக்குகளை எண்ணுவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.
மேலும் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்காத நிலையில் மதுரோவுக்கு ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.