அம்பாறை, பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்து வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்பே கடற்கரையானது, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு, சுற்றுலாப் பயணிகளை பெரிதாக ஈர்க்கும் இலங்கையின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது.
இப் பிரதேசத்திற்கு தினமும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் தொடர்ச்சியாக வருகைத் தருவதை அவதானிக்க முடிகிறது. இவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகள் இங்கே சாதாரண விலையில் கிடைக்கின்றமையினால், சுற்றுலாவுக்காக வருவோரின் விருப்பத் தெரிவாகவும் இப் பிரதேசம் இருந்து வருகின்றது.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இங்கு சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது நாடு மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் சுற்றுலாத் துறைசார்ந்த தொழில் புரியும் மக்களின் வாழ்வாதாரமும் விருத்தியடைந்து வருகின்றது.
வருடந்தோறும் பொத்துவில் கடற்பரப்பில் நடைபெறும் நீரலைச் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச அளவில் பிரபல்யம் பெற்றவையாகும். இதற்காகவே நூற்றுக்கணக்கான வெளிநாட்டு போட்டியாளர்களும் அவர்களோடு இணைந்ததாக பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் இங்கு வருகைத் தருகின்றனர்.
இங்கு வருகை தரும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபட தவறவில்லை என்பது விசேட அம்சமாகக் கருதப்படுகின்றது.
நாட்டுக்கு இதுவரையான காலப் பகுதியில் 12 இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ள நிலையில், பொத்துவில், அறுகம்பே பிரதேசத்திற்கு மாதந்தோறும் சுமார் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்டுக்கு அந்நியச் செலாவனியை ஈட்டித்தரும் குறித்த பிரதேசத்தை மேலும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.