கட்சி பேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இயலும் ஸ்ரீலங்கா மாபெரும் வெற்றிப்பேரணி மாவனெல்லை நகரில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி,
”கடந்த 2 வருடங்களுக்கு இந்த நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. ஜே ஆர் ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச போன்றவர்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த முன்மாதிரிகள் நெருக்கடியில் வீழ்ச்சியடையாமல் நாட்டை பாதுகாத்தவர்கள்.
எனவே ஜே ஆர் ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் வழிமுறைகளை பின்பற்றுவோம் நாடு தொடர்பாக சிந்தித்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.
இன்று இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்கள் பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர் நாடு தொடர்பாக சிந்தித்தே எம்முடன் இணைந்துள்ளனர்.
நாடு வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் நான் கட்சி பேதமின்றி சிந்தித்ததாலேயே நாட்டை மீட்டெக்க முடிந்தது. நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது நாட்டை பொறுப்பேற்றிருக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஓடிவிட்டார்.
நாட்டில் நாளாந்தம் ஆங்காங்கே எரிவாயு எரிபொருள் வரிசைகள் அதிகரித்தன மக்கள் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகின. நெருக்கடியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காகவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்.
இன்று நாடு சுமூகநிலையை அடைந்துள்ளது. முழுமையாக பொருளாதார ஸ்திரன்மை அடைவதற்கான இலக்கு நோக்கி பயணிக்கின்றோம்.
கட்சிபேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எதிர்காலத்தினை சிந்தித்து 21 ஆம் திகதி மக்கள் வாக்களிக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.