பங்களாதேசில் 2 வாரங்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில், வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்ததுடன் , மின் விநியோகம் பாதிப்பு, சாலை இணைப்பு துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளத்தில், சிக்கி 59 பேர் வரை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக பெனி மாவட்டத்தில் 23 பேரும், கமில்லா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். 11 மாவட்டங்களில் உள்ள நகராட்சி பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் 54 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் 40 லட்சம் பேர் வரை 3,900-க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், போதிய தூய்மையான குடிநீர் கிடைக்காத சூழலில், தொற்று நோய் பரவ கூடிய ஆபத்தும் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.