பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதியைச் சுற்றியுள்ள கடற்கரையிலிருந்து மோச்சா நகரம் வரையிலான பகுதிகளை மீண்டும் கைப்பற்ற, சவுதி ஆதரவுடைய யேமன் அரசுப் படைகள் திங்களன்று (05) மின்னல் வேக முன்னேற்றத்தை மேற்கொண்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த மாதம் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த பெரும்பாலான பகுதிகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், ராபிக்கில் உள்ள ஆராம்கோ சுத்திகரிப்பு நிலையம், அபா சர்வதேச விமான நிலையம் மற்றும் கமிஸ் முஷைத் இராணுவத் தளம் உள்ளிட்ட சவுதி அரேபியாவின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுத்திகள் தெரிவித்தனர்.
சவுதியின் தீவிர வான்வழித் தாக்குதல்களின் ஆதரவுடன், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் யேமன் படைகள் திங்கள்கிழமை இரவு மோச்சா நகரின் புறநகர்ப் பகுதிகளை அடைந்தன என்றும், ஹவுத்திப் போராளிகள் மலைப்பகுதிகளை நோக்கிப் பின்வாங்கிச் சென்றனர் என்றும் அரசாங்கத் தரப்பு வட்டாரங்கள் நான்கு உறுதிபடுத்தியுள்ளன.
இந்நகரம் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
இந்த முன்னேற்றம் உறுதிசெய்யப்பட்டால், ஈரான் ஹார்முஸ் நீரியை மூடியதோடு சேர்ந்து எரிசக்தி சந்தைகளை ஏற்கனவே கலக்கிவரும் செங்கடலின் முக்கிய எண்ணெய் வழித்தடத்தில் ஹவுத்திகளின் பிடியைத் தளர்த்தும்.
இருப்பினும், அக்குழு ஏனைய நிலைகளில் இருந்து ட்ரோன்களைக் கொண்டு கப்பல்களைத் தாக்கக்கூடும்.
அமெரிக்கா – ஈரான் மோதலின் விளைவாகத் தீவிரமடைந்த உள்நாட்டுப் போர் காரணமாக, யேமனின் பல்வேறு முனைகளில் கடந்த சில வாரங்களாகத் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.
இதில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பாப்-எல்-மண்டேப் நீரிணைப்பைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்வதுடன், சவுதி நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள், யேமனின் செங்கடல் பகுதியான ஹோடைடாவில் (Hodeidah) தங்கள் கடற்படை ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக திங்கள்கிழமை இரவு தெரிவித்தன.
கடந்த மாதம் ஹவுத்திகளால் கைப்பற்றப்பட்டபோது எரிசக்திச் சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய அந்த நீரிணைப் பகுதியின் நுழைவாயிலில் உள்ள துபாப் (Dhubab) மாவட்டத்தில், விமான ஓடுதளம் உள்ளிட்ட முக்கிய இடங்களை அரசுப் படைகள் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தன.
எனினும், 2014-ஆம் ஆண்டு முதல் தலைநகர் சனா உட்பட யேமனின் அதிக மக்கள் தொகை கொண்ட பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி ஆதரவு அரசின் கூற்றுகள் ஆதாரமற்றவை என்று கூறினர்.
இதற்கிடையில், யேமன் அரசாங்கத்தின் ஐந்து இராணுவ வட்டாரங்களின்படி, ஹவுத்திகள் மூன்றாவது பெரிய நகரமான தைஸுக்கு அருகே குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து, ஒரு மலைப்பாதையின் பகுதிகளைக் கைப்பற்றி, அரசாங்கப் படைகளை முற்றுகையிட்டனர்.
அந்தச் சாலை துண்டிக்கப்பட்டதை ஓர் அரசாங்க வட்டாரம் மறுத்துள்ளது.
சவுதி வான்வெளியில் போக்குவரத்தைத் தாக்குவோம் என்றும் அந்தக் குழு அச்சுறுத்தியது.
தீவிரமடைந்து வரும் இந்த மோதல், ரியாத்தின் நட்பு நாடுகளை நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளது.
சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், திங்களன்று ரியாத்தில் நடந்த அவசரக் கூட்டத்தில், தங்களின் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் சவுதி அரேபியாவில் இராணுவப் படைகளையும் திறன்களையும் விரைவாக நிலைநிறுத்த ஒப்புக்கொண்டதாக ஒரு கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
இந்தச் சண்டை, அரபுப் பிராந்தியத்தின் மிகவும் ஏழ்மையான நாடான யேமனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.
போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து 1,84,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. இடம்பெயர்வு அமைப்பு திங்களன்று தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.















