அனுர,ரணில், சஜித் ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்க்கப்பட்டது போல அவை அமைந்திருக்கின்றன. 13க்கு அப்பால் அவர்களிடம் தீர்வு கிடையாது. மேலும் இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி உருவாக்கப்படும் புதிய யாப்பு அடுத்த நாடாளுமன்றத்தில் தான் தீர்மானிக்கப்படும்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால், பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தர கூடும் என்பது தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. தபால் மூல வாக்கெடுப்புக்கு சில நாட்களே உண்டு.
தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ முடிவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை அறிவிக்கவில்லை. ஆனால் அதன் திருகோண மலைக் கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து கிளிநொச்சிக் கிளையும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கட்சியின் கீழ் மட்டத்தில் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலை எழத் தொடங்கிவிட்டது.அதை மேற்சொன்னை இரண்டு மாவட்டக் கிளைத் தீர்மானங்களும் நமக்கு உணர்த்துகின்றன.
இதனிடையே சுமந்திரன் தனது twitter பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
“தமிழ் வாக்குகள் பெருந்தொகையாக அரியநேந்திரனுக்கு விழுமாக இருந்தால்,
தமிழ் அரசியலின் போக்கு மேலும் தீவிர நிலைப்பாட்டை நோக்கித் திரும்பும். தமிழ் வாக்குகள் அரியநேத்திரனுக்குக் குறைவாக விழுந்தால் தமிழ்த் தேசிய அரசியல் போக்கு பலவீனமடையும். விளைவு எதுவாயினும், இறுதியிலும் இறுதியாக இழப்பு தமிழ் மக்களுக்குத் தான்.”
சுமந்திரன் கூறுவது போல தமிழ்த் தேசிய தீவிரவாத நிலைப்பாடு என்பது என்ன? ஒரு பொது வேட்பாளரின் நிலைப்பாடு தமிழ் தேசிய தீவிரவாத நிலைப்பாடு என்று அவர் கூற வருகிறார். பொது வேட்பாளர் நாட்டை பிரிக்க சொல்லி கேட்கிறாரா? அவர் தெளிவாகக் கூறுகிறார்.தமிழ் மக்களை ஒன்று திரட்டப் போகிறோம் என்று. திரண்ட தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உரத்த குரலில் சமரசத்துக்கு இடமின்றிக் கூறுவார்கள். அவ்வளவுதான். தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமான குரலில் பலமான நிலையில் நின்றபடி கூறுவது தீவிரவாதமா?
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படுவது தீவிரவாதமா? தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது தீவிரவாதமா? இல்லை. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது என்பது இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை பலப்படுத்துவதற்காகத்தான். முதலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பலப்பட வேண்டும். அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை, தேசிய இனம் என்பதை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் போதுதான் இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் அல்லது தேசிய இனங்கள் உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படும். அதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். அதை ஏற்றுக்கொள்வதுதான் இலங்கை தீவை ஐக்கியமாகக் கட்டி எழுப்ப ஒரே வழி. அதுதான் இலங்கைத் தீவின் இறைமையை பாதுகாக்கும்; சுதந்திரத்தைப் பாதுகாக்கும். எனவே தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது இலங்கைத் தீவை உடைப்பதற்காக அல்ல. இலங்கைத் தீவை ஒரு பலமான நாடாக கட்டி எழுப்புவதற்காகத் தான்.
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முன்வைத்த கருத்துருவாக்கிகள் தமிழ் மக்கள் பொதுச்சபையை தொடங்கிய பொழுது அதன் அமர்வுகளில் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டினார்கள். தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ற வார்த்தையை பாவியுங்கள். சிங்கள வேட்பாளர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று.
ஏனென்றால்,தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் பொசிட்டிவ் ஆனது. அது நெகட்டிவ் ஆனது அல்ல.
ஆனால் அவ்வாறு தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவது தீவிரவாதம் என்று சுமந்திரன் கருதுகின்றாரா?
தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதுதானே? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்தார்கள்? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா தனியோட்டம் ஓடினார்கள்? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா இப்பொழுதும் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக கருதுரைப்பதாக கூறிக்கொண்டு தமிழ் மக்களைச் சிதறடிக்க முற்படுகிறார்கள்?
ஆனால் அவருடைய கட்சியின் அடிமட்டம் அவருக்கு எதிராக முடிவு எடுக்க தொடங்கிவிட்டது. இரண்டு மாவட்ட கிளைகள் அந்த முடிவை வெளிப்படையாக அறிவித்து விட்டன. இனி வரும் நாட்களில் ஏனைய மாவட்ட கிளைகள் மத்தியிலும் அது நொதிப்பை ஏற்படுத்தும்.அதன் விளைவாக தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவுத் தளம் மேலும் பலமடையும்; பரவலடையும்.
தமிழ் பொது வேட்பாளரின் நோக்கம் எந்த ஒரு கட்சியையும் உடைப்பது அல்ல. உடைந்து கிடப்பவற்றைச் சேர்ப்பது தான். ஒரு நெல்மணி கூட வீணாக சிந்தக் கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எல்லாருக்குமானது அது அதற்குள் வராத கட்சிகளுக்குமாக எப்பொழுதும் திறக்கப்பட்டு இருக்கின்றது என்று தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் திரும்பத் திரும்பக் கூறுகின்றார்கள். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வெளியே நிக்கும் கட்சிகள் தமிழ்த் தேசிய கட்டமைப்பை விரோதமாக பார்க்கத் தேவையில்லை.
பொது வேட்பாளருக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கச் செல்லும் பொழுது மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், ஒரு உண்மை பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தமிழ் மக்கள் கட்சி அரசியலின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். அரசியலில் அவர்கள் ஏறக்குறைய சலிப்படைந்து விட்டார்கள். ஒரு பகுதியினர் விரக்தி அடைந்தும் விட்டார்கள். இது ஆபத்தான ஒரு வளர்ச்சி.
பொதுவாக கட்சி அரசியல் எனப்படுவது அதன் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான். மக்களை ஓர் அரசியல் சமூகமாகத் திரட்டுவது தான். நம்பிக்கை இழந்தவர்களை வைத்து கட்சியைக் கட்ட முடியாது. நம்பிக்கை இழந்தவர்களை வைத்து நாட்டையும் கட்டி எழுப்ப முடியாது. தேசத்தையும் கட்டி எழுப்ப முடியாது. எனவே தேர்தல் வார்த்தைகளில் கூறின், தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறார்.
கிழக்கில் இருந்து வந்திருக்கும் ஒரு அரசியல்வாதி அவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையை, திரட்சியை கட்டி எழுப்பும் குறியீடாக மாறி வருவது என்பது தமிழ் மக்களின் தாயக ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்தும்; பாதுகாக்கும்.
வடக்கும் கிழக்கும் ஏற்கனவே சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டு விட்டன. அரசாங்கம் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான நிலத் தொடர்ச்சியை அறுப்பதில் கணிசமான வெற்றிகளைப் பெற்று வருகிறது. தவிர நிர்வாக அலகுகளை இணைப்பதன் மூலமும் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான பிணைப்புகள் அறுக்கப்படுகின்றன. நில ஒருமைப்பாடு இல்லையென்றால் தாயகம் இல்லை. தாயகம் இல்லை என்றால் தேசியவாதமும் இல்லை. எனவே வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பது என்று முடிவு எடுத்து கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் ஒரு பொது வேட்பாளர் தமிழ் ஐக்கியத்தின் குறியீடாகவும் தமிழர் தாயக ஒருமைப்பாட்டின் குறியீடாகவும், தமிழ் ஐக்கியத்தின் குறியீடாகவும் மேல் எழுவாரா இல்லையா என்பதை தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு அள்ளிக் கொடுக்கப் போகும் வாக்குகளின் தொகை தான் தீர்மானிக்கும்.